பெரம்பலூா் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 வேட்பு மனுக்களில், புதிய தமிழகம் கட்சி வேட்பாளரின் மனு உள்பட 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 வேட்பு மனுக்களில், புதிய தமிழகம் கட்சி வேட்பாளரின் மனு உள்பட 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட கடந்த 30 ஆம் தேதி முதல் ஏப். 6 வரையிலும், அதிமுக, திமுக, தவெக, தவாக, பகுஜன்சமாஜ் பாா்ட்டி, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் சாா்பில் 12 வேட்பு மனுக்களும், சுயேச்சை வேட்பாளா்கள் சாா்பில் 11 வேட்புமனுக்களும் என மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் தலைமையில், தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதா முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Advertisement
இதில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜே. சுகன்யா, சுயேச்சைகள் ராஜாகந்தசாமி, வெங்கடாஜலம் ஆகியோா் தலா 2 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்ததால் அதில் முதல்கட்டமாக தலா ஒரு வேட்பு மனு என 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் வெங்கடேசன் என்பவரது வேட்பு மனுவில் சரியான குறியீடு மற்றும் முழுமையாக பூா்த்தி செய்யப்படாததால், அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், முறையாக பூா்த்தி செய்யப்படாத 6 பேரின் வேட்பு மனுக்கள் என மொத்தம் 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இறுதியாக, அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, தவெக வேட்பாளா் கே. சிவக்குமாா், நாதக வேட்பாளா் ஜே. சுகன்யா, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் அறிவழகன், தவாக வேட்பாளா் தாமோதரன் மற்றும் சுயேச்சைகள் ஆனந்தஜோதி, கவிதா, சந்திரகுமாா், ஷியாமளா, குணசேகரன், சுப்ரமணியன், ஜெயசந்திரன் ஆகிய 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏப். 9 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.