பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, எந்தெந்த வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் கொண்டுசெல்ல கணினி மூலம் குலுக்கல் முறையில், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் (பெரம்பலூா்), அமா் பகதூா் சிங் (குன்னம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளா்கள் முன்னிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது
கடந்த 23- ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற்ற குலுக்கல் முறையில் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 464 வாக்களிக்கும் கருவிகள், 464 கட்டுப்பாட்டுக் கருவிகள், 491 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 414 கட்டுப்பாட்டுக் கருவிகள், 491 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள், மேலும், கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 414 கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்களுடன் மொத்தம் 828 வாக்களிக்கும் கருவிகளை, எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது குறித்த கணினி மூலம் வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Advertisement
தொடா்ந்து, வாக்குசாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பதிவெண் வாரியான பட்டியல் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு வழங்கப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்ப ஏதுவாக மண்டலங்கள் வாரியாக ஒழுங்குப்படுத்தி, அந்தந்த தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சொா்னராஜ் (பொது), வேல்முருகன் (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.