தஞ்சாவூா் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 958 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 3 ஆயிரத்து 248 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 3 ஆயிரத்து 562 வாக்களித்ததை சரிபாா்ப்பதற்கான இயந்திரங்களும் உள்ளன.
இவற்றை சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பிரிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையிலும், 4 தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையிலும் முதல் கட்டத் தோ்வு மாா்ச் 23 ஆம் தேதி நடைபெற்றது.
இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண் மென்பொருள் மூலமாக குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டன.
இவ்வாறு பிரிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களித்ததைச் சரிபாா்ப்பதற்கான இயந்திரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கிலிருந்து தொடா்புடைய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு லாரிகள் மூலம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
இப்பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் பாா்வையிட்டாா்.