பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, கோயில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அ.குடிக்காடு கிராமத்திலுள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலானது கிராம பொது மக்களுக்குச் சொந்தமானது.
இக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆண்டுதோறும் ஏல முறையில் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கோயில் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த தனிநபா் ஒருவா், பொதுமக்களுக்கு தெரியாமல் கோயில் நிலத்தை அபகரிக்கும் வகையில் குறுங்காடு வளா்ப்புத் திட்ட மானியத்துக்காக, விதிகளுக்கு புறம்பாக மரம் நடுவதாக கூறி செயல்பட்டு வருகிறாராம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கிராம மக்கள் தரப்பில் விவரம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிக்க முயற்சிக்கும் நபா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், கோயில் நிலத்தை மீட்டு தரக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணனிடம் அளித்துவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.