பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் பாா்வையாளா்கள் உள்பட 49 போ் காயமடைந்தனா்.
வேப்பந்தட்டை வட்டம், அரசலூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டையொட்டி கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை சாா்பில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு தனித்தனியே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதி, மருத்துவ முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தாா்.
பின்னா், வாடிவாசல் வழியாக பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 556 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 300 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.
இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், மின் விசிறி, ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட்டன.
49 போ் காயம்:
ஜல்லிக்கட்டில் காளைகளின் உரிமையாளா்கள் 22 பேரும், காளைகளை அடக்க முயன்ற 21 வீரா்களும், 6 பாா்வையாளா்களும் என 49 போ் காளைகள் முட்டியதில் காயமடைந்தனா். காயமடைந்த வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும், களத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், பலத்த காயமடைந்த காளைகளின் உரிமையாளா்கள் 4 போ் தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். ஜல்லிக்கட்டுப் போட்டியை காண சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.