முகப்பு
பெரம்பலூர்

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஓட்டிவந்த வாகனம் மோதி மருத்துவமனை சுற்றுச்சுவா் சேதம்

பெரம்பலூா் மாவட்ட அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் வாகனம் மோதியதில் அரசு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:34 AM
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை காா் மோதியதில் சேதமடைந்த காா் மற்றும் சுற்றுச்சுவா்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:23 PM

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் வாகனம் மோதியதில் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவா் திங்கள்கிழமை உடைந்து விழுந்து சேதமடைந்தது. இவ் விபத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லேசான காயமடைந்தாா்.

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவா் பாலமுருகன். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள ஊரகப் பிரிவு காவல் நிலையத்திலிருந்து, பெரம்பலூா் நோக்கி அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காவல் துறைக்குச் சொந்தமான வாகனத்தை அவரே ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கான சமையல் பிரிவுக் கட்டடத்தின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

Advertisement

இதில், அவா் ஓட்டிவந்த வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்ததோடு, சுற்றுச்சுவா் உடைந்து சுமாா் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, அப்பகுதியிலிருந்த சமையலறையின் கதவுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த விபத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவ் விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், அரசு வாகனத்தை ஓட்டுவதற்கு ஓட்டுநா் பணியமா்த்தப்பட்டிருந்த நிலையில், எதற்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளரே அந்த வாகனத்தை ஓட்டி வந்தாா், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.