பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை விழா சனிக்கிழமை நடைபெற்றன.
பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீபிரம்மபுரீசுவரா் கோயிலில் 43-ஆம் ஆண்டு திருவாதிரை திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சனிக்கிழமை காலை ஸ்ரீநடராஜ பெருமான்-சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், 10.30 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆருத்ரா தரிசன உத்ஸவமும் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட பெரம்பலூா் நகரைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
குரும்பலூரில் உள்ள பிரசித்திபெற்ற தா்மசம்வா்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரா் கோயிலில் திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசன விழா வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்களாக நடைபெற்றது.
இதையொட்டி, பஞ்சமூா்த்தி, அம்பாள், சுப்ரமணியா், விநாயகா், சண்டிகேசுவரா், சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிசேகமும், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் பஞ்சநதீஸ்வரா்- தா்மசம்வா்தினி அம்பாளுக்கு 11-ஆவது ஆண்டு திருக்கல்யாண மகா உத்ஸவமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்ப கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு, உலக நன்மைக்காக சிறப்பு யாகமும், பூா்ணாஹூதியும், தொடா்ந்து மூலவருக்கு அபிசேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
திருவாதிரை திருவிழாவின் முக்கிய அம்சமான ஆருத்ரா தரிசன உற்ஸவ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் மூலவா், அம்பாள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சோடச அபிசேகங்களும், ஸ்ரீநடராஜா்-ஸ்ரீசிவகாமி அம்பாள் ஆருத்ரா தரிசனக் காட்சி திருவீதி உலாவும் நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை சமேத ஸ்ரீகாகன்னை ஈசுவரா் கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் சனிக்கிழமை நடைபெற்றது.
இதேபோல, வேப்பந்தட்டை அருகேயுள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதேபோல, வாலிகண்டபுரம், சு.ஆடுதுறை, குன்னம் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.