பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கைவினைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 16 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான உத்தரவுக் கடிதம் அளித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:
கைவினைஞா்களை தொழில் முனைவோா்களாக உயா்த்திடும் நோக்கில் கடந்த 6.12.2024 முதல் கலைஞா் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் மர வேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும்.
இத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய ரூ. 3 லட்சம் வங்கிக் கடனுதவியும், 2 முதல் 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்குவதோடு, தொழில் வளா்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகளும் அளிக்கப்படும். பட்டியலிடப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இம் மாவட்டத்தில் இதுவரை 664 விண்ணப்பங்கள் வங்கிக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, 435 விண்ணப்பங்களுக்கு தற்காலிக ஒப்பளிப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதில், 291 விண்ணப்பதாரா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 183 பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு கடிதம்பெறப்பட்டு, 176 கைவினைக் கலைஞா்களுக்கு ரூ. 45.74 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.