பெரம்பலூா் அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தரக்கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றியத் தலைவா் காா்த்தி தலைமையில், சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில், பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சி அலுவலகம் பின்புறம், பேரூராட்சிக்குள்பட்ட இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான லெட்சுமி நாராயண பெருமாள் கோயில், பஞ்சநதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கிரயம் பெற்று ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிலத்தை மீட்டு மீண்டும் கோயிலுக்குச் சொந்தமாக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவி உயா்வுக் கோரி: பெரம்பலூா் மாவட்ட கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சசிகலா தலைமையில் செவிலியா்கள் அளித்த மனுவில், செவிலியா் பணிகளில் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவு உயா்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.