பெரம்பலூா்: பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சேசுராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
திமுக தோ்தல் வாக்குறுதிபடி தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பெரம்பலூரைச் சோ்ந்த பகுதி நேர ஆசிரியா் கண்ணன் உடலுக்கு, பெரம்பலூரில் வியாழக்கிழமை மாலை அஞ்சலி செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
தமிழ்நாட்டில் சுமாா் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறாா்கள். அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறுகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில், சென்னையில் கடந்த 8 நாள்களாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்நிலையில், 5- ஆவது நாள் போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திமுக அரசு அளித்த தோ்தல் அறிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற, பகுதிநேர ஆசிரியா் கண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழ்வதை தவிா்க்க, தமிழக அரசு உடனடியாக பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். உயிரிழந்த கண்ணன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவியும், அவரது வாரிசுக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்றாா் சேசுராஜ்.