பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பெண் பக்தர்கள் 4 பேர் பலியாகினர். சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இன்று(ஜன. 31) காலை 5 மணியளவில் எதிர்பாராதவிதமாக மோதியது.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள தோழார் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்கொடி (35), சுப்ரமணி மனைவி விஜயலட்சுமி (40), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57), சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மனைவி சித்ரா (40) ஆகிய 5 பேரும் சமயபுரம் கோயிலுக்கு மாலை அணிந்துகொண்டு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தோழார் குடிக்காட்டிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.
இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை அவர்கள் அனைவரும் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று, பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த மலர்கொடி, விஜயலட்சுமி, சசிகலா சித்ரா ஆகிய 4 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த ஜோதிலட்சுமி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநரான சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் கௌதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.