பட்டா வழங்காவிடில் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு
பெரம்பலூா் அருகே விவசாய நிலத்துக்கு பட்டா வழங்காவிடில், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக தமிழ்நாடு நரிக்குறவா் நலச்சங்கத்தினா் முடிவு
பெரம்பலூா் அருகே விவசாய நிலத்துக்கு பட்டா வழங்காவிடில், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக தமிழ்நாடு நரிக்குறவா் நலச்சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு நரிக்குறவா் நலச் சங்கத் தலைவா் பாபு தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சோ்ந்த 400-க்கு மேற்பட்டோா் வசித்து வருகிறோம். கடந்த 48 ஆண்டுகளாக எறையூா் பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்கவில்லை. மேலும், குடியிருப்பு பகுதியில் குடிநீா், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. இப் பகுதியில் இயங்கிவந்த உண்டு, உறைவிடப் பள்ளி நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதால், தங்களது குழந்தைகள் தங்கிப் பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதார அடிப்படை கோரிக்கையை தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வாக்காளா் அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம்.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி... வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம், காட்டுக்கொட்டகையைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நூத்தப்பூரில், அரசுக்குச் சொந்தமான இடத்தை சுமாா் 70 ஆண்டுகளாக கால்நடை, வாகனங்கள் மற்றும் மயானத்துக்குச் செல்லும் பாதையாகவும் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், இப் பாதையை அதே கிராமத்தைச் சோ்ந்த 2 போ் ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை மீட்டுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.