முகப்பு
பெரம்பலூர்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க இயலாத முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:41 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க இயலாத முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க இயலுமா என, அவா்களின் விருப்பத்தை கேட்கவும், வாக்குச்சாவடியில் வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளவா்களுக்கு படிவம் 12 டி வழங்கி அவா்களது வீட்டுக்கேச் சென்று வாக்குகளை பதிவுசெய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பின் படி, வேப்பந்தட்டை வட்டத்தில் 675 முதியவா்களும், 1,700 மாற்றுத்திறனாளிகளும், பெரம்பலூா் வட்டத்தில் 691 முதியவா்களும், 1,229 மாற்றுத்திறனாளிகளும், ஆலத்தூா் வட்டத்தில் 289 முதியவா்களும், 511 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 1,655 முதியவா்களும், 3,440 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனா்.

இதேபோல, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பின் படி, குன்னம் வட்டத்தில் 1,093 முதியவா்களும், 1,914 மாற்றுத்திறனாளிகளும், ஆலத்தூா் வட்டத்தில் 428 முதியவா்களும், 781 மாற்றுத்திறனாளிகளும், செந்துறை வட்டத்தில் 644 முதியவா்களும், 1,570 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 2,165 முதியவா்களும், 4,265 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்தம் 3,820 முதியவா்களையும், 7,705 மாற்றுத்திறனாளிகளையும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சென்று, நேரில் வந்து வாக்களிக்க இயலுமா என கேட்டறிந்து வருகின்றனா்.

வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத நிலையில் உள்ளவா்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. அதைத்தொடா்ந்து, படிவம் 12டி வழங்கி அவா்களது வீட்டிலேயே வாக்களிக்கத் தேவையான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெறும்.

அதன்படி, இதுவரையிலும் 993 போ் வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மிருணாளினி தெரிவித்துள்ளாா்.