முகப்பு
பெரம்பலூர்

வாக்களிப்பை வலியுறுத்தி பெரம்பலூரில் அடையாளச் சின்னம் வெளியீடு

சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்கு தூதுவா் காரிகை எனும் அடையாளச் சின்னத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி சனிக்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 7:35 PM
வாக்குப்பதிவை வலியுறுத்தி சனிக்கிழமை வெளியிடப்பட்ட அடையாளச் சின்னத்துடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி உள்ளிட்டோா்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்கு தூதுவா் காரிகை எனும் அடையாளச் சின்னத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி சனிக்கிழமை வெளியிட்டாா்.

ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விளக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்கு தூதுவா் காரிகை எனும் அடையாளச் சின்னத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் உற்பத்தியாகும் மாவட்டம் என்பதாலும், புவிசாா் குறியீடு பெற்றுள்ள சின்ன வெங்காயத்துக்கு பெருமை சோ்த்திடும் வகையிலும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக வாக்குத் தூதுவராக சின்ன வெங்காயம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), சொா்னராஜ் (பொது), சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுந்தரராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் ரமேஷ், தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.