போக்ஸோ, குற்றவியல் வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு
பெரம்பலூா் மாவட்டத்தில் புலன் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டவா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் புலன் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டவா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் போக்சோ, குற்றவியல் வழக்குகளின் புலன் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பாக பங்காற்றிய புலன் விசாரணை அலுவலா்கள், மருத்துவா்கள், நீதிமன்றக் காவலா்கள், தடய அறிவியல் நிபுணா்கள் மற்றும் அரசு வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், போக்சோ மற்றும் பல்வேறு முக்கிய வழக்குகளில் துரிதமாகவும், திறம்படவும் செயல்பட்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த உதவிய அதிகாரிகள் மற்றும் நிபுணா்களுக்கும், வழக்குகளின் விசாரணை, மருத்துவ அறிக்கைகள் தயாரித்தல், தடய அறிவியல் ஆதாரங்களை சேகரித்தல், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.
Advertisement
Advertisement
தனியாா் பேருந்து உரிமையாளா்களுடன் ஆலோசனை: தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் பேசியது:
பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பேருந்துகளில் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இம் மாவட்டத்தில் இயக்கப்படும் 49 தனியாா் பேருந்துகளில் 43 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேருந்துகளிலும் உடனடியாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தனியாா் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால், விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களை உடனுக்குடன் கண்டறியலாம் என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சிகளில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), துணைக் கண்காணிப்பாளா்கள் ரவிச்சந்திரன் (பெரம்பலூா் உட்கோட்டம்), ஆனந்தி (மங்களமேடு உட்கோட்டம்), காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் பலா் பங்கேற்றனா்.