நெம்மகோட்டையில் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 பேருக்கு காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நெம்மகோட்டை சித்திவிநாயகர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமையில் சார் ஆட்சியர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் புதுகை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 721 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை 204 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டி காயமடைந்த 5 பேருக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 2 பேர் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலீப் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.