முகப்பு
புதுக்கோட்டை

ஏரி, குளங்களைத் தூர்வாரி, தைல மரங்களை அகற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வார போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், தைல மரங்களை அகற்ற வேண்டுமென  விவசாயிகள் வலியுறுத்தினர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வார போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், தைல மரங்களை அகற்ற வேண்டுமென  விவசாயிகள் வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் புதன்கிழமை  நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டதால் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயத்தைக் காப்பாற்ற மழைநீரைச் சேமிக்க ஏரி,  குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். இதேபோல,  கல்லணையில் இருந்து நாகுடி வாய்க்காலின் கடைமடைப் பகுதியான மும்பாலை வரை உள்ள வாய்க்கால்கள், மண்தட்டிய இடங்கள், அதே பகுதியில் உள்ள ஏரிகள் போன்றவற்றைத் தூர்வார வேண்டும்.
விவசாயி தனபதி: புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியில் உள்ளது. இதனால் ஆண்டின் சராசரி மழையளவு குறைந்து கொண்டே செல்கிறது.  மாவட்ட வறட்சிக்கு முக்கியக் காரணம் தைல மரக்காடுகளே. இந்த ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு வறட்சியின்போது கிராமங்கள்தோறும் குடிநீர் தொட்டி அமைத்து கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யப்பட்டது. அதேபோல,  இந்த ஆண்டும்  செய்ய வேண்டும். தற்போது குளங்களில் நீர் இல்லாததால், குளத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தொடரும் வறட்சிக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்க கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
விவசாயி செல்லதுரை:  புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசு பொது தேர்வுகளை முன்னிட்டு எந்த நேரத்தில் விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்கும், எந்த நேரத்தில் கிடைக்காது என மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாவட்ட வனப்பகுதியில் தைலமரங்கள் நடுவதைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். சோளம், கடலை போன்ற பயிர்களுக்கும் பயிர்க் காப்பீடு கிடைக்க வழி செய்ய வேண்டும்.
விவசாயி சொக்கலிங்கம்: அறந்தாங்கி ஒன்றியம்,  பூதக்குடி பகுதி குளத்தில் உள்ள தைலமரங்களை அகற்ற வேண்டும். ஆவனத்தான்கோட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக்கடன்களுக்கு வட்டியை குறைக்க வேண்டும்.
விவசாயி மாரிமுத்து: மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  அதிகாரிகள் மழையளவு குறித்த புள்ளிவிவரங்களை சரியான முறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும். தைல மரங்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால்  நாங்களே அகற்றுவோம், அரசு கண்டுகொள்ளக் கூடாது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வார  போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், சார் ஆட்சியர் கே.எம். சரயு, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →