இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் கைவிடப்பட்டது
கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் நாற்றுநடும்
கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் நாற்றுநடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.
கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலை மிக மோசமான நிலையில் குண்டும்குழியுமாக உள்ளதை சீர் செய்ய வலியுறுத்தி, கடந்த ஜூன் 22 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.
அப்போது கந்தர்வகோட்டை வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்று 30 நாள்களுக்குள் சாலையை சீர் செய்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்து பல மாதங்களாகியும் இந்தச் சாலையை செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் கவனக்குறைவைக் கண்டித்து சாலையை உடனே சீர் செய்துதரக்கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தை அறிவித்து கட்சியின் ஒன்றிய செயலாளர் உ . அரசப்பன் தலைமையில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ் . ராஜேந்திரன் , நகரசெயலாளர் ஜி . நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் கந்தர்வகோட்டை கறம்பக்குடி சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடைபெற இருந்தது.
அப்போது, வருவாய்த் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைக்கவுள்ளதாக தந்த கடிதத்தின் நகலை காவல் ஆய்வாளர் மூலமாக போராட்டக் குழுவினரிடம் வழங்கினர். இதையடுத்து, சாலையில் நாற்றுநடும் போராட்டம் கைவிடப்பட்டது.