மாங்கோட்டையில் மஞ்சுவிரட்டு: 9 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 9 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 9 பேர் காயமடைந்தனர்.
மாங்கோட்டையில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கோயில் அருகேயுள்ள திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில், புதுகை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10 காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டில் தலா 11 பேர் கொண்ட 10 குழுக்களாக மாடுபிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
அதில், பலத்த காயமடைந்த 3 பேர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி குழுவினருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. ஆலங்குடி போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.