புதுக்கோட்டை

ஆலங்குடியில் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: பள்ளிவாசல் மீது கல்வீச்சு; பதற்றம், போலீஸ் குவிப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு  இந்து முன்னணி நகரத் தலைவர், அவரது தந்தை ஆகியோர் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்கள் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 ஆலங்குடி அருகிலுள்ள மாங்கோட்டை ஊராட்சி தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(55). இவரது மகன் முருகானந்தம்(28). இவர், இந்து முன்னணியின் நகரத்தலைவராகவும், ஆலங்குடியில் பிளக்ஸ் பேனர் நிறுவனமும், அரிசிக் கடையும் நடத்தி வருகிறார்.
முருகானந்தத்திற்கும், ஆலங்குடியைச் சேர்ந்த அப்துல் கலாம் மகன் அப்துல் ரகுமானுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முருகானந்தத்தின் கடைக்குள் புகுந்த அப்துல்ரகுமான் உள்ளிட்ட 7 பேர் கணேசனையும், முருகானந் தத்தையும் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனராம்.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
இதைத்தொடர்ந்து முருகானந்தத்தின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆலங்குடியிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசி தாக்கியதோடு, இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகளையும் சேதப்படுத்தினர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, திருச்சி  சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், அரிவாளால் வெட்டியவர்களில் ஒருவராகக்  கூறப்படும் முஸ்தபா, திங்கள்கிழமை காலை ஆலங்குடியிருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்றபோது, திருவரங்குளம் வனப்பகுதியில் பேருந்தை வழிமறித்து மர்மநபர்கள் முஸ்தபாவை தாக்கிவிட்டு, தப்பியோடிவிட்டனர்.  பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கணேசன், முருகானந்தம் இருவரையும் வெட்டியது தொடர்பாக, கே.முகமதுகனி(19), கே.முகமது நியாஸ்(21), எ.முஸ்தபா, எ. அப்துல் ரகுமான், அப்பாஸ், கணேசன், மணிகண்டன் ஆகியோர் மீது ஆலங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பள்ளிவாசல் மீது கற்களை வீசியது தொடர்பாக பாச்சிக்கோட்டையைச் சேர்ந்த எம்.ராஜேஸ்கண்ணா(18), சி.விக்னேஸ்வரன்(22), டி.சிவா, ஆண்டிகுளத்தைச் சேர்ந்த ஆர்.ஜெயராம்(34) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவத்தால் இருதரப்பினருக்கும் மோதல் உருவாகும் பதற்றமான சூழல் நிலவியது.  இதையடுத்து ஆலங்குடியில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை   அடைக்கப்பட்டன. தொடர்ந்து, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT