சங்க இலக்கியங்களிலேயே புதுக்கோட்டை மண்ணின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன என்றார் எழுத்தாளர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டை அரசுக் கல்வியியல் கல்லூரி, முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் ஆகியவை இணைந்து திங்கள்கிழமை நடத்திய புதுகையைப் போற்றுவோம் என்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது
உலகில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் தடயங்களில் அதிக அளவிலான தடயங்கள் இந்தியாவில்தான் கிடைத்துள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் 60 சதவிகித தொல்லியல் தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் மிகப் பெரும்பான்மையானவை புதுக்கோட்டை மண்ணைச் சேர்ந்தவை. சமணச் சான்றுகளில் சுமார் 75 சதவிகிதம் புதுக்கோட்டையைச் சேர்ந்தவையே.
சங்க இலக்கியங்கள் தொடங்கி சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்களில் பெரியபுராணம் போன்றவற்றில் புதுக்கோட்டைக்கான பதிவுகள் ஏராளம் உள்ளன. சங்க காலத்தில் பன்றி நாடு என்றும், இடைக்காலத்தில் கலசமங்கலம் என்று அறியப்பட்ட இந்த மண்ணில், தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் கோட்டை கட்டப்பட்ட பிறகுதான் புதுக்கோட்டை என்ற பெயர் உருவானது.
விடுதலைக்குப் பிறகு பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தபோதும் எவ்வித பிரச்னையும் இன்றி 1948 மார்ச் 3ஆம் தேதி இந்தியாவுடன இணைந்தது புதுக்கோட்டை சமஸ்தானம். அதன்பிறகு, கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான், புதுக்கோட்டை மன்னரின் 100 ஏக்கர் பரப்பிலான புதிய அரண்மனை அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த அரண்மனை வளாகத்தில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
1928இல் புதுக்கோட்டைக்கு மின்சாரமும், 1929இல் ரயிலையும் கொண்டு வந்தவர் தொண்டைமான் மன்னர். தனிக்கோட்டை, தனிக்கொடி, தனி அதிகாரம், தனி இலச்சினையைக் கொண்டு செயல்பட்டது இந்த சமஸ்தானம்.
கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது புதுக்கோட்டை சமஸ்தானம் என்ற குற்றச்சாட்டு வீண் பழிதான். அதில் உண்மையில்லை என்றார் முத்துநிலவன்.
புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் ஜெ. ராஜா முகமது பேசியது
புதுக்கோட்டைப் பகுதியில் அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற கற்களில் குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும், சிந்துசமவெளியில் கிடைக்கப்பெற்ற கற்களிள் குறியீடுகளும் ஒத்துப்போகின்றன. புதுக்கோட்டையில் 16 குடைவரைக் கோவில்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. மனித முகம், சிங்க உடலைக் கொண்ட பீடங்கள் நார்த்தாமலை கோவிலில் காணப்படுகின்றன.
இவை எகிப்திய சிற்பக் கலையின் அடையாளங்களை ஒத்துள்ளன என்றார் ராஜாமுகமது.
கருத்தரங்குக்கு கல்வியியல் கல்லூரி முதல்வர் ம. அன்புச்செழியன் தலைமை வகித்தார். முன்னதாக ஆய்வு மையத்தின் இணைச் செயலர் சா. விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் உதவிப் பேராசிரியர் பா. பிரபாகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.