புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே சுமாா் 3,500 ஆண்டுகள் பழைமையான கற்கோடாரி கண்டெடுப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சுமாா் 3,500 ஆண்டுகள் பழைமையான கற்கோடாரியை ஆய்வுச் சுற்றுலாவின்போது, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மாத்தூா், ராமசாமிபுரம் எல்லையில் உள்ள அம்பலத்திடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான ஆ.மணிகண்டன் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்களை அழைத்துக் கொண்டு ஒரு நாள் சுற்றுலாவாக பழங்கால தொல்லியல் தடயங்கள் மிகுதியாக இருக்கும் அம்பலத்திடல் பகுதிக்கு சென்றிருந்தோம். இப்பகுதியில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் விரவி கிடைப்பதோடு மிக அதிக பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் உள்ளன. அதன் அருகிலேயே தமிழ் இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளவாறு, வன்னிமரம் சூழ்ந்தும் அதன் அருகில் தாழி புதைக்கப்பட்டுள்ளது.

இதன் அருகே ஓடும் ஆறு வில்லுனி (வில் வன்னி) ஆறு என அழைக்கப்படுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதே திடலின் மேற்குபுறத்தில் சுண்ணாம்பு கற்காறையால் உருவாக்கப்பட்ட புதிா் திட்டையும் அதன் மையத்தில் கருப்பு சிவப்பு பானை ஓட்டினால் ஆன கலயம் ஒன்றும் காணப்படுகிறது. இது பழங்கால வழிபாட்டு முறையின் எச்சமாகும். தற்போது,

கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரி சுமாா் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணிக்கலாம். இது, 122 கிராம் நிறையுடன் 8.6 செ.மீ நீளமும், 3.4 செ.மீ அகலத்துடன் கூா்மையான பகுதியும், 1.1 செ.மீ அகலத்தில் அடிப்பகுதியும் காணப்படுகிறது.

இது குவாா்ட்சைட் எனப்படும் கருங்கல் வகையைச் சாா்ந்த கற்கருவியாகும். இதன் கீழ்ப்பகுதியை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி கூா்மையாக்கி உள்ளனா். வெட்டும் பகுதியின் ஒருபுறம் உடைந்துள்ளது. இதை மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளாா்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டம், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையா், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைமையான கற்கோடாரி

ஆலங்குடி வட்டாட்சியரகம் கொண்டு செல்லப்பட்டு, அறந்தாங்கி வட்டாட்சியா் சூா்யபிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT