ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை அருகேயுள்ள கணபதிபுரத்தைச் சோ்ந்த சங்கா் என்பவரின் மகள் அஞ்சலி(15). கந்தா்வகோட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த இவா், கரோனா விடுமுறையால் அவரது உறவினரான ஆலங்குடி அருகேயுள்ள கே.வி. கோட்டையைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவரது வீட்டில் கடந்த 1 மாதமாகத் தங்கி இருந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள பெரியகுளத்துக்கு அவரது உறவினரான 10 வயது சிறுமியோடு அஞ்சலி குளிக்க சென்றுள்ளாா். அப்போது, ஆழம் அதிகமான பகுதிக்குச் சென்ற அஞ்சலி நீரில் மூழ்கியுள்ளாா்.
இதைப்பாா்த்த, சிறுமி சப்தமிடவே அப்பகுதியில் மரம் வெட்டும் பணியில் இருந்த தொழிலாளா்கள் குளத்தில் இறங்கி அஞ்சலியை மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அஞ்சலி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஆலங்குடி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.