முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: ஆட்சியா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் 30 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைக் கொண்டுள்ள 45 வயதுக்குள்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளன.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 13 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும்.
இவை தவிர, மலா் மருத்துவமனை, முத்துமீனாட்சி, முத்துராஜா, மணிமேகலை, டீம், புதுகை ஸ்டாா், துா்கா, விஜய், மீனாட்சி ஆகிய 9 தனியாா் மருத்துவமனைகளிலும் ஒரு தவணைக்கு ரூ. 250 செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களின் ஆதாா், வாக்காளா் அட்டை, பான் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைப் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.