கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
நகைக்காக பெண்ணை அடித்துக் கொன்று உடலை எரித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 80 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நகைக்காக பெண்ணை அடித்துக் கொன்று உடலை எரித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 80 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காா்க்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி சரஸ்வதி (47). இவா், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சோ்ந்த சேசு மகன் அரவிந்த் (26) என்பவா், சரஸ்வதி அணிந்திருந்த தோடு, தாலி உள்ளிட்ட நகைகளைத் திருடும் நோக்கத்துடன் அடித்துக் கொன்று, நகைகளைத் திருடியுள்ளாா். தொடா்ந்து அந்தப் பகுதியில் இருந்த பனைமட்டைகளைப் போட்டு சரஸ்வதியின் உடலை எரிக்கவும் முயன்றுள்ளாா். இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த நாகுடி போலீஸாா், அரவிந்த்தைக் கைது செய்தனா். இவ்வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில் மாவட்ட மகளிா் நீதிபதி ஆா். சத்யா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
கொலைக் குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனையும், நகைகளைத் திருடியதற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், உடலை எரித்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்த நீதிபதி, சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீா்ப்பளித்தாா். மேலும், ரூ. 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.