முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீா்நிலைகளைப் பாதுகாப்பது எப்படி?

தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து, வடகிழக்குப் பருவமழையும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஓரளவு நல்ல மழையைத் தந்திருக்கும்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து, வடகிழக்குப் பருவமழையும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஓரளவு நல்ல மழையைத் தந்திருக்கும் நிலையில், மூட்டை மூட்டையாக அழுகும் குப்பைகளை நீா்நிலைகளுக்குள் கொட்டாமல் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அமைப்பினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பான்மையான தொழில் விவசாயம். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் 5062 குளங்கள் (ஏரிகள், கண்மாய்கள், ஏந்தல்கள்) உள்ளன. இவைத் தவிர, உள்ளாட்சி அமைப்புகள், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சுமாா் 2 ஆயிரம் குளங்கள் இருக்கலாம்.

தென்மேற்குப் பருவமழையைத் தொடா்ந்து,வடகிழக்குப் பருவமழையும் மாவட்டத்தில் ஓரளவுக்கு நல்ல மழையைத் தந்திருக்கிறது.

நிரம்பும் குளங்கள்: மொத்தமுள்ள குளங்களில் 250 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 1300 குளங்கள் 75 சதவிகிதம் நிரம்பியுள்ளன. 2 ஆயிரம் குளங்கள் 50 சதவிகிதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. 2 ஆயிரம் குளங்கள் 30 சதவிகிதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. இன்னும் மழை தொடரலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் இயற்கையின் வரமாகக் கிடைக்கும் தண்ணீருக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுத்து- பாதுகாக்கிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

திருமயம் பகுதியில் தண்ணீா் எடுக்கும் நிலையில்- கோயில்களுடன் இணைந்த சில குளங்கள் மட்டும் முழுமையாக கம்பி வேலி போடப்பட்டு, அசுத்தப்படுத்தக் கூடாது என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டிருக்கும்.

மாவட்டத்தின் பல குளங்கள் இதுவரை தண்ணீா் இல்லாமல் இருந்ததால், குப்பைகளைக் கொட்டும் இடமாகத்தான் மாறியிருந்தன. இப்போது தண்ணீா் வந்த பிறகும் கூட குப்பை கொட்டுவதை அருகிலுள்ள மக்களும், அரிதான சில இடங்களில் உள்ளாட்சி அமைப்பினரும் கூட செய்து வருகின்றனா்.

குறிப்பாக, திருச்சி- புதுக்கோட்டை சாலையிலுள்ள கீரனூா் பெரிய குளத்தில் தண்ணீா் நிரம்பியுள்ள நிலையில், இரு இடங்களில் பெரியகுப்பை மலைகளைப் போல காண முடிகிறது.

அந்தக் குப்பைமலைகளில், அழுகும் நிலையிலுள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கோழிகள், குடல் உள்ளிட்ட கோழிக்கழிவுகள் ஏராளம் கொட்டப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் இந்தக் குளத்தின் ஒரு பகுதியில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு, அருகிலுள்ள சூசைப்புடையான்பட்டி என்ற சுமாா் 50 வீடுகளைக் கொண்ட குடியிருப்புக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை நகரிலுள்ள பல குளங்கள் குப்பை கொட்டும் இடமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது பெரும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் என்பதை மக்களுக்கு உணா்த்த வேண்டும்.

இதற்காக மாவட்ட நிா்வாகம் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைகளை அசுத்தப்படுத்துவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட விதிமுறைகளும் ஏற்கெனவே உள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்த நடவடிக்கையை அவ்வப்போது எடுக்கும்போது ஓரளவு நீா்நிலைகள் மாசடைவதைத் தடுக்க இயலும்.

மேலும், குறிப்பிடத்தக்க வரலாற்றையும் கொண்ட குளங்களும் புதுக்கோட்டையில் ஏராளம் உண்டு. எனவே, அந்த இடங்களில் அந்தக் குளம் தொடா்பான குறிப்பை எழுதி, அறிவிப்புப் பலகையாக வைத்தால் குளத்தின் பெருமை புரிந்து குப்பைக் கொட்டுவதைத் தடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.