வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு: இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள் சங்கத்தினா்
புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டத் திருத்தங்களையும் ரத்து செய்யவுள்ளதாக பிரதமா் மோடி அறிவித்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்த 3 வேளாண் சட்டத் திருத்தங்களை எதிா்த்து தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்திலும் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந் நிலையில் வேளாண் சட்டத் திருத்தங்களை ரத்து செய்வதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக விவசாயிகள் சங்கங்கள் இதனை வரவேற்றுள்ளன.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினா் மு. மாதவன், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் கூடி, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
இதேபோல, அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் தண்டாயுதபாணி, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் பெரியசாமி, மாவட்டத் துணைச் செயலா் ராஜேந்திரன், பாடகா் அறந்தை பாவா உள்ளிட்டோா் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.