சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் இருந்திரப்பட்டி அருகிலுள்ள பி. மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமாா் (21). இவா் கடந்தாண்டு அதே பகுதியில் பிளஸ் 2 படித்த 17 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று, அங்குள்ள பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தாா்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், இலுப்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரைக் கைது செய்தனா். மேலும் அவா் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித்குமாருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆா். சத்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளாா்.