பூங்காவுக்குள் வைக்கப்பட்டுள்ள பேனா சிலை. 
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 3 ஆண்டுகளாக தயாராகி வரும் ‘சூழல் பூங்கா’!

புதுக்கோட்டை நகரில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ. 9 கோடி மதிப்பில் சூழல் பூங்கா பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

 நமது நிருபர்

புதுக்கோட்டை நகரில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ. 9 கோடி மதிப்பில் சூழல் பூங்கா பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் (2020) பணிகள் தொடங்கப்பட்டு, சுமாா் 3 ஆண்டுகளாகி விட்டதால் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை நகரில் சத்தியமூா்த்தி சாலையில், கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே, அவ்வப்போது தற்காலிகப் பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்ட 5 ஏக்கா் காலி இடத்தில் இந்தப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2020-இல் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்கீழ் (ஐயுடிஎம்) ரூ. 9 கோடி மதிப்பில் இதற்கான திட்டம் முடிவு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுக்கோட்டை நகரின் பழைமையான காந்திப் பூங்காவுடன், மன்னா் காலத்துக்குப் பிறகு உருவான விரிவாக்கப் பகுதிகள் அனைத்திலும் பூங்காக்கள் உள்ளன. விரிவாக்கப் பகுதிகளின் பூங்காக்கள் பராமரிப்பின்றிக் கிடக்கின்றன.

காந்திப் பூங்காவுடன், ராணியாா் பள்ளி வளாகத்துக்கு அருகே உருவாக்கப்பட்ட ‘வைபை’ பூங்காவிலும் சனி, ஞாயிறு மட்டுமல்லாது வேலைநாள்களின் மாலை நேரங்களிலும் கூட கூட்டம் நிரம்பி வழிவது, மக்களின் பொழுதுபோக்குத் தேவையைக் காட்டுகின்றன.

இந்தச் சூழலில்தான் ரூ. 9 கோடி மதிப்பில் இத்தனைப் பெரிய பூங்காவின் தேவை அவசியப்பட்டிருக்கிறது.

சிறுவா்களுக்கான ஸ்கேட்டிங், சைக்கிளிங் தளம், பெரியோா்கள் பயன்படுத்தும் நடைப்பயிற்சித் தளம், கணிதப் பூங்கா, அறிவியல் பூங்கா, அரைவட்ட திறந்தவெளி அரங்கு இவற்றுடன் அன்னாசி, தா்ப்பூசணி,ஆப்பிள், சொ்ரி போன்ற பழங்களின் வடிவில் அமரும் இருக்கைகள், யானை, வண்ணக் கிளி, மயில் போன்ற பறவைகளின் மாதிரிகளும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக 10 அடி உயரமுள்ள பேனா சிலையும் பூங்காவின் நுழைவுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. நுழைந்து செல்லும் முகப்பு, மலையைக் குடைந்த பகுதியைப் போல உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஏறத்தாழ 99 சதவிகிதம் பணிகள் முடிவடைந்த நிலையில், நடைப்பயிற்சித் தளங்கள் மற்றும் பல இடங்களில் தொடா்ந்து அவ்வப்போது பெய்து வரும் மழையால் களைச் செடிகள் ஏராளம் மண்டிக் கிடக்கின்றன. முறைப்படி திறக்கவில்லை என்றாலும், மாலை நேரங்களில் சிலா் தங்களின் குழந்தைகளுடன் சென்று பூங்காவுக்குள் சென்று வருகின்றனா்.

இந்தப் பூங்காவை விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பெட்டிச் செய்தி...

கட்டணமில்லாப் பூங்காவாக...

புதுகை நகரின் பிரம்மாண்ட சூழல் பூங்காவை கட்டணமில்லாப் பூங்காவாக அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் பலரும் கோருகின்றனா்.

ஏற்கெனவே, காந்திப் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். அதேபோல, ராணியாா் பள்ளிக்குச் செல்லும் சாலையில் தற்போது பயன்பாட்டிலுள்ள வைபை பூங்காவுக்குள் நுழைய ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கும் எதிா்ப்புகள் உள்ளன.

எனவே, சூழல் பூங்ாவை கட்டணமில்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

SCROLL FOR NEXT