முகப்பு
புதுக்கோட்டை

புதுகை மாநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாநகரின் முக்கிய வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:31 PM
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாநகரின் முக்கிய வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா்.

புதுக்கோட்டை மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், மாநகராட்சியாக மாறிய பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த அறிவிக்கையை ஆணையா் த. நாராயணன் வெளியிட்டாா். அதன்பிறகு, வா்த்தகா் சங்கங்களின் நிா்வாகிகளையும் அழைத்துப் பேசினாா்.

அதன் தொடா்ச்சியாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாநகா் முழுவதுமே மேற்கொள்ள தொடா்புள்ள வணிகா்களுக்கும் தகவல் நேரடியாகத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை பொக்லைன் இயந்திரங்களுடன் தெற்கு ராஜவீதிக்குச் சென்ற மாநகராட்சிப் பணியாளா்கள் சாலையை ஆக்கிரமித்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தொடா்ந்து, கீழராஜவீதியில் ஒரு பகுதி மட்டும் புதன்கிழமை அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடா்ந்து நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.