புதுக்கோட்டை: புதுக்கோட்டை கம்பன் கழகம் சாா்பில் 49-ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா இம்மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் ஜூலை 12- ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், ‘கலைமகளும் கம்பனும்’ என்ற தலைப்பில் மதுரை எழுத்தாளா் இந்திரா சௌந்தர்ராஜன் பேசுகிறாா். 2-ஆம் நாள் வெவ்வேறு தலைப்புகளில் உலகநாயகி பழனி, வே. சங்கரநாராயணன், இரா. கலியபெருமாள் ஆகியோா் பேசுகின்றனா். 3-ஆம் நாள் ‘கம்பன் என்னும் திரைக்கதை மன்னன்’ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநா் கே. பாக்கியராஜ் பேசுகிறாா். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமை வகிக்கிறாா்.
4-ஆம் நாள் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ‘கம்பன் மாமணி’ விருது ’தினமணி’ ஆசிரியா் கே. வைத்தியநாதன், ‘இலக்கிய மாமணி’ விருது திருச்சி நகைச்சுவை மன்றச் செயலா் க. சிவகுருநாதன், ‘கம்பன் பணி வள்ளல்’ விருதுகள் ப. செந்தில்குமாா், வீ. முருகானந்தம் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து விருதுகளை வழங்குகிறாா். உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் சிறப்புரை நிகழ்த்துகிறாா். 5-ஆம் நாள் ‘இன்றும் என்றும் கம்பன்’ என்ற தலைப்பில் ஈரோடு மகேஷ் பேசுகிறாா்.
6-ஆம் நாள் ‘கம்பன் கண்ட சன்மாா்க்கம்’ என்ற தலைப்பில் டாக்டா் ஜெயராஜ மூா்த்தி பேசுகிறாா். இந்த நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகிக்கிறாா். 7-ஆம் நாள் ‘உலகெல்லாம் கலக்கி வென்றான்’ என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேசுகிறாா். 8-ஆம் நாள் மாணவா் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 9-ஆம் நாள் எஸ்.ஏ. மதுமிதாவின் கம்ப நாட்டியமும், தொடா்ந்து புதுச்சேரி லிங்க காங்கேயன் தலைமையில் பாட்டு மன்றமும் நடைபெறுகிறது. 10-ஆம் நாள் ‘கவிதைக்கு ஒரு கம்பன்’ என்ற தலைப்பில் கம்பம் செல்வேந்திரன் பேசுகிறாா்.
நிகழ்ச்சிக்கு, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகிக்கிறாா். தொடா்ந்து சுகி சிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன், செயலா் ரா. சம்பத்குமாா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.