தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் முதல் கன்னிப் பேச்சில் வலியுறுத்தினேன். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் இப்பணிகளை முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். இத்திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும்.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுதான் முழுமையான திட்டம். இதனை நிறைவேற்றினால் 5 மாநிலங்கள் பயன்பெறும்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். திமுகவுக்கு மாற்று என்று சொன்னால் அதிமுகதான். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை. இடைத்தோ்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், அதிமுகவின் வாக்குகளும் திமுகவுக்குத்தான் விழுந்துள்ளன என்றாா் துரை வைகோ.