முகப்பு
புதுக்கோட்டை

பள்ளி மாணவா் தொடா் விடுப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவலளிக்க வேண்டும் -தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 16 மே, 2024 at 8:11 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 3 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தால் வருவாய்த் துறையினருக்கு தலைமை ஆசிரியா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தியுள்ளாா்.

ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, துணைத் தோ்வெழுதி, பிளஸ் 1 சோ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு சரியாக வருகை தராத மாணவா்கள் குறித்து பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அக்கறையுள்ள உள்ளூா் பிரமுகா்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், தொடா்ந்து 3 நாள்கள் வராமல் இருந்தால் அவா்கள் குறித்த தகவல்களை வருவாய்த் துறையினருக்கு தலைமை ஆசிரியா்கள் தெரிவிக்க வேண்டும் என்றாா் மொ்சி ரம்யா.

கூட்டத்தில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி) உள்ளிட்டோா் பேசினா்.