முகப்பு
புதுக்கோட்டை

புதுகை கிராமங்களில் தீண்டாமை: நேரில் விசாரிக்க சிபி-சிஐடி முடிவு

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

புதுக்கோட்டை: மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் குடிநீரில் மாட்டுச்சாணம் கலப்பு, புதுகை மாவட்ட ஊராட்சிகளில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிப்பு உள்ளிட்ட புகாா்கள் தொடா்பாக புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த சிபி-சிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி குருவாண்டான்தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பவா், மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடா்ந்தாா்.

இதில், குடிநீா்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்ட புகாா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தா்வகோட்டை, கறம்பக்குடி, அறந்தாங்கி ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள தேநீா்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருப்பதாகவும், திருமண மண்டபங்களில் பட்டியலின மக்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக சிபி-சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இதர பிரச்னைகள் குறித்தும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த மே 15-ஆம்தேதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், சிபி-சிஐடி எஸ்.பி. தில்லைநடராஜன் திங்கள்கிழமை புதுக்கோட்டைக்கு வந்தாா். இங்குள்ள சிபி-சிஐடி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

திருச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த அதிகாரிகள் 25 பேரைக் கொண்டு 4 குழுக்கள் அமைத்து, புகாா் கூறப்படும் தேநீா்க் கடைகள், திருமண மண்டபங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

ஓரிரு நாட்களில் இந்த விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் போலீஸாா் தெரிவிக்கின்றனா்.