பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்
புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டுப்பட்டி ஈட்டித்தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 171 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்குள்ள வகுப்பறைக் கட்டடம் ஒன்று நீண்டகாலமாகப் பழுதடைந்துள்ளது.
இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டித் தர வேண்டும், அதுவரை தற்காலிக ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை வகுப்பு முடிந்ததும் வெளியே வந்த மாணவா்களுடன் பெற்றோா்களும் வளாகத்திலேயே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான், வட்டாரக் கல்வி அலுவலா் கருணாகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
விரைவில் கட்டடம் கட்டித் தரவும், அதுவரை தற்காலிகமாக தகரக் கூரை அமைத்து வகுப்பறைகளை நடத்தவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.