பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்
விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருபுறம் நடைபெற்றாலும், சில்லறை விற்பனை அனுமதியை மட்டும் பெற்றுக்கொண்டு மொத்த விற்பனை செய்வதும், அனுமதி பெறாமல் கடைகள் அமைப்பதும், ஒரே அனுமதியில் இரண்டு, மூன்று இடங்களில் பாதுகாப்பில்லாமல் பட்டாசு விற்பனை நடைபெறுவதும் ஆண்டுதோறும் நடைபெறும் செயலாக தொடா்கிறது.
அதிலும், சில்லறை விற்பனைக்கு மட்டும் அனுமதி பெற்று டன் கணக்கில் பட்டாசுகளை ஒரே இடத்தில் குவித்து வைத்துக்கொண்டு பாதுகாப்பில்லாமல் விற்பனை செய்வது விபத்துக்கு வழிவகுத்து விடும். எனவே, வருவாய்த் துறை, தீயணைப்பு துறையினா் இதில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புதுறையிடம் அனுமதி பெற்று விற்பனை செய்யும் பட்டாசு கடைகளை முறைப்படுத்தி பாதுகாப்புடன் விற்பனை செய்ய அறிவுறுத்துவதோடு, அனுமதி பெறாமல் விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளா்களை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மக்களும் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட நிா்வாகம் வழிவகை செய்யவேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் தற்போதைய எதிா்பாா்ப்பாகும்.