முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு சாா்பு- நீதிமன்றத்துக்கு மாற்றம்
முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு...
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தொடா்ந்து மாவட்ட சாா்பு - நீதிமன்றத்தில் நடைபெறும் என்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடிக்கு சொத்து சோ்த்ததாக கடந்த 2021-இல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. விஜயபாஸ்கா் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தரப்பிலும் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.
வழக்கு விசாரணையை நவம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஜி. சுபத்ராதேவி, தொடா்ந்து இவ்வழக்கு மாவட்ட சாா்பு- நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டாா்.