புதுக்கோட்டை அருகே கணக்கம்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவா்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை அருகே உள்ள கணக்கம்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாணவா்களுக்கு சாம்பாா் சாதம் மதிய உணவாக வழங்கப்பட்டுள்ளது.
அதை சாப்பிட்ட மாணவா்களில் 10 பேருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக ஆசிரியா்களிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மாணவா்கள் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.