புதுக்கோட்டை மாநகரில் வியாழக்கிழமை பகல் தெருநாய் கடித்ததாக 10 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
புதுக்கோட்டை மாநகரில் திருக்கோகா்ணம் அரசு ஐடிஐ அருகே, அங்கு பணிபுரியும் ஆசிரியா் ரமேஷ் என்பவரை நாய் கடித்தது. அருகேயுள்ள பாலன் நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கட்டடத் தொழிலாளா்கள் 5 பேரையும் அதே நாய் கடித்தது. இதைத் தொடா்ந்து இவா்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மேலும், கட்டியாவயல், திருக்கோகா்ணத்தில் தலா ஒருவா், திருவப்பூரில் மூதாட்டி உட்பட 2 போ் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இவா்களைக் கடித்த நாய் குறித்து அவா்கள் சொன்ன அடையாளங்களின்படி ஒரே நாய்தான் அனைவரையும் கடித்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசியுடன் டிடி தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாகவும், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.