புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகே போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரைத் தேடிப் பிடிப்பதற்காக இரு தனிப்படையினா் ஒடிசா மாநிலத்துக்கு விரைந்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 15 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரு நாள்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தச் மகேந்திரா கமாங்கா என்ற இளைஞரை போலீஸாா் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து வந்தனா்.
சிறை அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட வைத்தபோது, அவா் தப்பியோடினாா். இரு நாள்களாக ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் ஆலங்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் தலைமையில் அமைக்கப்பட்ட 4 தனிப்படைகளில் இரு தனிப்படையினா், ஒடிசா மாநிலத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.