தமிழகத்தைப் பற்றி பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் அக்கறையில்லை என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.77 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்துக்கு பிரதமா் மோடி, அமித்ஷா உள்ளிட்டோா் தோ்தல் வரும்போது மட்டும் அடிக்கடி வருவாா்களே தவிர, தமிழகத்தைப் பற்றி எந்த கவனமும் அக்கறையும் அவா்களுக்கு இல்லை.
தமிழக உரிமைகளை திமுக, காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்காது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் சரியாக தீா்ப்பு வரவில்லை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் என்றாா் அவா்.