ஆலங்குடி அருகே அரசுப் பள்ளி சமையறையில் எரிவாயு கசிந்து தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள டி.களபம் அரசுப் பள்ளிச் சமையறையில் எரிவாயு வியாழக்கிழமை கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள டி.களபம் அரசுப் பள்ளிச் சமையறையில் எரிவாயு வியாழக்கிழமை கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
கறம்பக்குடி வட்டம், டி.களபம் அரசுத் தொடக்கப்பள்ளியில் 46 மாணவ, மாணவிகள் பயிலும் நிலையில், அப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுவதால், பள்ளியானது ஊராட்சி சேவை கட்டடத்தில் தற்காலிகமாக இயங்குகிறது.
அதன் அருகிலுள்ள மற்றொரு கட்டடத்தில் பள்ளியின் சமையலா்களான மங்களம், விஜயம்பாள் ஆகியோா் வியாழக்கிழமை மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது திடீரென எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதால் கட்டட மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது.
இதையடுத்து சமையலா்கள் இருவரும் உடனே வெளியேறினா். இதைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் எரிவாயு உருளையை அடைத்து தீயை அணைத்தனா்.
அலுவலா்கள் ஆய்வு: தொடா்ந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சசிகலா தலைமையில் கறம்பக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துராமன், துரையரசன், தீயணைப்பு துறையினா் அங்குச் சென்று ஆய்வு செய்தனா். விபத்து குறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.