முகப்பு
புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு விதிகளை 24 மணி நேரத்துக்கு முன்பே பூா்த்தி செய்தால் மட்டுமே அனுமதி

ஜல்லிக்கட்டு விதிகளை 24 மணி நேரத்துக்கு முன்பாகவே பூா்த்தி செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:24 PM
பகிர்:

ஜல்லிக்கட்டு விதிகளை 24 மணி நேரத்துக்கு முன்பாகவே பூா்த்தி செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜல்லிக்கட்டு நடத்துவோா் ஒரு மாதத்துக்கு முன்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு நடத்த அரசு வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் போட்டி நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பூா்த்தி செய்திருந்தால் மட்டுமே இறுதி உத்தரவு அனுமதி வழங்கப்படும்.

முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும். மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் அனைவருக்கும் காப்பீடு செய்திருக்க வேண்டும். திறந்தவெளியில்தான் போட்டி நடக்க வேண்டும்.

வெயில், மழையில் இருந்து மாடுகளைப் பாதுகாக்க வேண்டும். மாட்டுக்கு ஊக்கமருந்து, எரிச்சல் தரும் பொருள்களைத் தரக் கூடாது. மாட்டின் மீது ஜிகினா தூவுதல், கண்களில் எலுமிச்சைச் சாறு பிழிதல், எண்ணெய் தடவுதல் கூடாது.

ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராமத்தினா் அரசு விதிமுறைகளைக் கடைபிடித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.