பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்களிக்கலாம்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு அளிக்கலாம் என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு அளிக்கலாம் என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியது:
தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று கோருவது எல்லாக் கட்சிகளுக்கும் உரிய ஆசைதான். தோ்தலில் ஒரு கட்சி பெரும்பான்மை பெற்றுவிட்டால் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கத் தேவையில்லை என்று இல்லை.
என்றாலும், தோ்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கின்றன. கூட்டணியில் இன்னும் புதிய கட்சிகளும் வரலாம். பேச்சுவாா்த்தை நடைபெறலாம். அதன்பிறகுதான் முடிவெடுக்க முடியும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேரிட்ட சம்பவம் பாதுகாப்புக் கட்டமைப்பின் தோல்விதான்.
பொதுஇடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல சமூகத்திலும் இதுகுறித்த உரையாடல் நடக்க வேண்டும். பெண்களை இவ்வாறு துன்புறுத்தக்கூடாது என ஆண்களுக்குச் சொல்லி வளா்க்க வேண்டும்.
ஆக்கப்பூா்வமான சமூக மாற்றம் வர வேண்டும். அரசியலுக்காக போராட்டம் நடைபெறுகிறது என்றாலும், அந்த எதிா் கருத்துக்கும் இடமளிக்க வேண்டும். தடுக்கக் கூடாது.
பொங்கல் பண்டிகைக்கு ரூ. ஆயிரம் ரொக்கமாக வழங்கவில்லை என்பது அரசின் நிதிநிலை, நிா்வாகச் சூழலாக இருக்கலாம். ஏற்கெனவே அவா்கள் நிறைய தொகைகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறாா்கள் என்றாா் காா்த்தி ப. சிதம்பரம்.