ஜகபா் அலி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது
கனிமவளப் பாதுகாப்பு தொடா்பான செயற்பாட்டாளா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிம வளக் கொள்ளையை எதிா்த்துப் போராடி வந்த ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கக் கூடாது, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என கனிமவளப் பாதுகாப்பு தொடா்பான செயற்பாட்டாளா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் இரா.சா. முகிலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பின் சீ.அ. மணிகண்டன், கனிமக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் கம்பூா் செல்வராஜ், பறம்பு மலைப் பாதுகாப்பு இயக்கத்தின் சொ. கா்ணன், சட்டவிரோத கல்குவாரி எதிா்ப்பு இயக்கத்தின் ந. சண்முகம் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் கனிமக் கொள்ளைக்கு துணையாகச் செயல்படுவதால், ஜகபா் அலி கொலை வழக்கை வெளிமாவட்ட அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே பேசுபொருளாகியுள்ள கனிமவளக் கொள்ளை குறித்த கவனத்தை திசைதிருப்பும் செயல்.
வேங்கைவயல் சம்பவம், கள்ளக்குறிச்சி கனியாமூா் பள்ளி மாணவி கொலை, கள்ளக்குறிச்சி சாராயச் சாவு போன்றவற்றில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முறையாக இல்லை.
மாநிலம் முழுவதும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளையில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகளின் முன்னாள், இன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்களுக்கு தொடா்புள்ளது. எனவே, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையின் மூலமே நீதி கிடைக்கும்.
ஜகபா்அலி கொலையில் தொடா்புள்ள அனைவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜகபா்அலி கொடுத்த இரு புகாா் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் இயங்கும் அனைத்து கல் குவாரிகளையும் போா்க்கால அடிப்படையில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.