கீரனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிதறிக் கிடக்கும் மதுப் பாட்டில்கள், நெகிழி டம்ளா்கள், தீனிப் பொட்டலங்கள். 
புதுக்கோட்டை

இரவில் திறந்தவெளி மது அருந்தும் கூடமாகும் கீரனூா் அரசுப் பள்ளி வளாகம்!

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் நகரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்தும் அரங்காக மாறியுள்ளதை, மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரின் நகரின் மையப் பகுதியில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இதே வளாகத்தில், அரசுத் தொடக்கப் பள்ளியும், அரசு ஐடிஐ-யும் செயல்பட்டு வருகின்றன.

பழைமையான இந்த வளாகத்தில் மொத்தத்தில் ஏறத்தாழ ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். புதிதாக அண்மையில் தொடங்கப்பட்ட இந்த ஐடிஐ-யில் மாணவிகளும் உண்டு.

இந்த நிலையில் வளாகத்திலுள்ள திடலை இரவு நேரத்தில் மது அருந்தும் கூடமாக அந்தப் பகுதியிலுள்ள சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

அவா்கள் பயன்படுத்திவிட்டுப் போன மது மற்றும் தண்ணீா் பாட்டில்கள், தீனிப் பொட்டலங்கள், புகைத்துப் போட்ட சிகரெட் துண்டுகளும் அப்படியே கிடக்கின்றன. பகலில் எப்போதாவது அவை கூட்டி சுத்தம் செய்யப்படுகின்றன.

எனவே, இப்பள்ளி வளாகத்தை பாதுகாப்பானதாக மாற்ற மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

இதுகுறித்து கீரனூா் சமூக ஆா்வலா் முருகபிரசாத் கூறியது: பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவா் இருக்கிறது. ஆனால், அதற்கான கதவு மூடப்படுவதில்லை. திறந்தவெளியாக இருப்பதால் சமூக விரோதிகள் தாராளமாக மைதானத்தின் உள்ளே வந்து மது அருந்திச் செல்கின்றனா்.

இரவுக் காவலா் பணியிடங்களும் உள்ளன. அவா்கள் பகல் நேரத்தில் பள்ளியின் இதர பணிகளுக்கு பயன்படுத்துகிறாா்கள். கோவிலாக நினைத்துப் படிக்க வேண்டிய பள்ளி வளாகத்தை இந்தப் பகுதி இளைஞா்கள் தவறாகப் பயன்படுத்துவது வேதனை தருகிறது.

கல்வி நிலைய வளாகத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும். வேலை நேரத்தைத் தவிர இதர நேரங்களில் யாரும் செல்லாத வகையில் பூட்ட வேண்டும். இரவுக் காவலா் பணியில் இருக்க வேண்டும். கீரனூா் காவல் துறையினா் தினமும் அந்தப் பகுதியில் சென்று மது அருந்துபவா்கள் இருந்தால் அவா்களை விரட்ட வேண்டும் என்றாா் முருகபிரசாத்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகத்திடம் கேட்டபோது அவா் கூறியது: உடனடியாக அந்தப் பள்ளி வளாகம் ஆய்வு செய்யப்படும். இரவுக் காவலா் பணி குறித்து முடிவு செய்யப்படும் அல்லது அருகிலுள்ள பள்ளியின் பணியாளா் மாற்றுப் பணியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினருக்கும் புகாா் அளிக்கப்பட்டு, ரோந்துப் பணி மேற்கொள்ள வைத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT