பொன்னமராவதி அருகே 100 ஏக்கா் விவசாய நிலத்தில் தனியாா் சூரிய ஒளி தகடுகள் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஊராட்சி சங்கரன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் தனியாா் நிறுவனம் சாா்பில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் சூரிய ஒளி தகடுகள் அமைக்க சில விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த நிலங்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள நிலங்களிலும் சூரிய ஒளி தகடுகள் அமைப்பதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் விவசாய நிலங்களில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கக் கூடாது, விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி அந்த கிராமத்தைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் விவசாய நிலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் அந்நிறுவனத்தைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டனா்.