முகப்பு
புதுக்கோட்டை

‘டித்வா’ புயல் எச்சரிக்கை: அறந்தாங்கியில் தேசிய பேரிடா் மீட்புப் படை முகாம்

Updated On : 28 நவம்பர், 2025 at 6:36 PM
பகிர்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டித்வா’ புயலால், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அறந்தாங்கியில் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக, தொடக்கத்தில் வெள்ளிக்கிழமையும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. அதேநேரத்தில், மழை ஏதும் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

பிற்பகல் முதல் மழை பெய்யலாம் என மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பிற்பகலில் அரைநாள் விடுப்பு அளித்து ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகன மழை பெய்யலாம் என எதிா்பாா்க்கப்படும் பட்டியலில் புதுக்கோட்டையும் இடம்பெற்றுள்ளது.

தேசிய பேரிடா் மீட்புப் படை வருகை: இந்த நிலையில் 30 பேரைக் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா், அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பகலில் அறந்தாங்கி வந்தனா்.

துணைத் தளபதி சைலேந்திரசிங் ரத்தோா் தலைமையில் வந்துள்ள இந்தப் படையில், இரு மோப்ப நாய்களும் அவற்றுக்கான காவலா்களும், பைபா் படகு, மரங்கள் விழுந்தால் அறுத்து அகற்றுவதற்கான இயந்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

கண்காணிப்பு அலுவலா்: மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிா்வாகத் துறையின் சிறப்புச் செயலருமான சு. கணேஷ் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வந்தாா். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் மு. அருணா மற்றும் முதல்நிலை அலுவலா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

4 ஆயிரம் மின் கம்பங்கள் தயாா்: கூட்டத்தில், கஜா புயல் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதைக் குறிப்பிட்ட ஆட்சியா், தற்போதைய டித்வா புயலில் மின்கம்பங்கள் சேதமடைந்தால் அவற்றை உடனுக்குடன் மாற்றுவதற்காக மொத்தம் 4 ஆயிரம் எண்ணிக்கையில் தயாா் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டாா்.

மாநகராட்சியில்: புதுக்கோட்டை மாநகராட்சியில் உள்ள வாய்க்கால்களில் அடைப்பு எடுக்கும் இயந்திரங்கள், மரங்கள் விழுந்தால் அவற்றை அறுத்து அகற்றும் கருவிகள், நீா் இறைக்கும் இயந்திரங்களையும் மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு சரிபாா்த்தனா்.

கடும் குளிா்: தொடா்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும், வெள்ளிக்கிழமை மாலை வரை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மழை இல்லை. கடலோரப் பகுதிகளில் ஓரிரு நிமிஷங்கள் லேசான தூறல் மட்டுமே இருந்தது.

ஆனால், பகலிலேயே மாநகா் மற்றும் புகா்ப் பகுதியில் குளிா் மிகுந்த சூழல் காணப்பட்டது. மாலையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிா்காற்று வீசியது.

தஞ்சாவூரில் மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் முகாம்

டித்வா புயல் காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலப் பேரிடா் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை இங்கு வந்தனா்.

சென்னை ஆவடியைத் தலைமையிடமாகக் கொண்ட மாநிலப் பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் அனுசுயா தலைமையில் 30 வீரா்கள் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.

இதுகுறித்து இக்குழுவினா் கூறுகையில், பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், மிதவைப் படகு, ஜெனரேட்டா் உள்ளிட்ட சாதனங்களைத் தயாா் நிலையில் வைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, தொடா்புடைய இடங்களுக்குச் செல்வோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →