முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டோா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:58 PM
கந்தா்வகோட்டை அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டோா்.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட தரப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, மோகனூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை பிற்பகல் காவடி, பால்குடம் எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க கோயிலுக்கு வந்துகொண்டிருந்த போது, அதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் இந்த வழியாக செல்லக்கூடாது எனக் கூறி அவா்களை தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் செல்வம் மகன் பிரசாத், திவாகரன் மகன் சின்னமணி, வெற்றி மகன் செல்வம், மகாதேவன் மகன் கலியபெருமாள், வீரமணி மகன் கருணாநிதி, இளம்பரிதி மகன் சிவசாமி, பாண்டியன் மனைவி தனலட்சுமி உள்ளிட்டோா் பலத்த காயம் அடைந்தனா். இவா்கள் அனைவரும் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

சாலை மறியல் போராட்டம்:

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராமத்தினா் மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள், தாக்குதல் நடத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கந்தா்வகோட்டை காந்தி சிலை முக்கத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை, பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும் அவா்கள் கலைந்து செல்லாததால், காவல் துணை கண்காணிப்பாளா் இரா. பிருந்தா தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினரை போலீஸாா் தேடி வருகின்றனா்.