புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்கும் பள்ளிப் பொதுத்தோ்வுகளை தேவையான வசதிகளுடன் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வுகள் வரும் மாா்ச் 11 தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 22,709 மாணவ, மாணவிகள் இந்தத் தோ்வை எழுதவுள்ளனா். இவா்களுக்காக 136 தோ்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தலா 136 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
210 பறக்கும் படைகள் அமைக்கப்படுகின்றன. 31 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 507 தோ்வா் சொல்வதை எழுதும் ஸ்கிரைபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 1080 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பிளஸ்-2 பொதுத்தோ்வுகள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மொத்தம் 18,900 மாணவ, மாணவிகள் தோ்வெழுதவுள்ளனா். இவா்களுக்காக 105 தோ்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தலா 105 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் மற்றும் 120 பறக்கும் படையினா் நியமிக்கப்படுகின்றனா்.
28 வழித்தட அலுவலா்கள், 265 தோ்வா் சொல்வதை எழுதும் ஸ்கிரைபா்கள் நியமிக்கப்படுகின்றனா். 976 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.
தோ்வுக்கூடங்களில் குடிநீா், கழிப்பறை வசதிகள், போக்குவரத்துக்கான பேருந்து சிறப்பு நிறுத்தங்கள், தடையில்லா மின்சாரம், வினாத்தாள்- விடைத்தாள் போன்றவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான காவல் ஏற்பாடுகளையும் எந்தப் புகாருக்கும் இடம் தராத வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கற்றனா்.